Translate

Thursday, November 26, 2015

சாகா கலை

வள்ளலார்  உரைத்த சாகா கலை பற்றி என் அறிவுக்கு எட்டிய 
வரையில் புரிந்து கொண்ட செய்திகளை கவிதை வடிவில்
எழுத முயற்சி செய்துள்ளேன்.


சாகா கலையினாலே போகாது
உயிர் விட்டு
வேகாது இத்தேகம்
மாயாது தேயாது
பிணம் என்ற சொல் அங்கு
பிணமாகும்
ஒளியாகி நறுமணம்  வீசுவது
நம் மனமாகும்

Saturday, November 21, 2015

மனம் போல வாழ்வு

கவிதைக்குத்தான் இரண்டு பொருள் கொள்ள முடியும் என்று சொல்வார்கள் .
எடுத்துக்காட்டாக ,
கற்க கசடற கற்பவை கற்ற பின் 
நிற்க அதற்கு தக 
என்ற குறளுக்கு ஐயத்திற்கு இடம் 
இன்றி எதையும் கற்க வேண்டும் .பின்பு கற்ற படி நடக்க வேண்டும்
என்பதே நம் பள்ளி நாட்களில் தமிழ் ஆசிரியர்கள் நமக்கு 
கற்பித்தது.
ஆனால் இதே குறளுக்கு இசைஞானி இளையராஜா சிந்திக்கும் 
பொருளே வேறு மாதிரி உள்ளது.
கசடற என்றால் கெட்ட செய்திகளை படிக்க கூடாது .
நல்ல செய்திகளை மட்டுமே கற்று அதன்படி நடக்க வேண்டும் 
என்று பொருள் கொள்கிறார் . இது அவரின் ஆன்மிக பார்வை ஆகும்.
இதைபோலவே ,
மனம் போல வாழ்வு  என்ற வாழ்த்து வாக்கியத்தை இரண்டு 
விதமாக நான் பொருள் கொள்கிறேன்.
நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் அதன்படி நல் வாழ்க்கை அமையும்
என்பது ஒரு பொருள்.
நமக்கு இந்த வாழ்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்று நேர்மறையாக
சிந்தித்தால் அதன்படி மகிழ்ச்சியான வாழ்வு 
எதிர்மறையாக நான் நினைத்தது எதுவும் கைகூட வில்லையே என்று 
உள்ளம் குமுறி கொண்டே இருந்தால் வேதனையான வாழ்வு.

சுழற்சி

ஓடிக்கொண்டே இருக்கிறேன் 
ஓர் நாள் என் வாழ்வில் வெற்றி வாராதா
என்ற ஏக்கத்தில் 
வாடிக்கொண்டே  இருக்கிறேன் 
கால் வலியில் நடந்துகொண்டே 
தேடிக்கொண்டே  இருக்கிறேன் 
என் கதையை கேட்போரை 
நாடிக்கொண்டே இருக்கிறேன் 
நல்லவர்களை நியாயம் தெரிந்தவர்களை 
பாடிக்கொண்டே இருக்கிறேன்
பாட்டு முடியும் வரை ...

Tuesday, November 3, 2015

அமைதியான நதியினிலே ஓடம்

மக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த
சட்டமன்ற தேர்தல் அது.
நான்கு முனை போட்டியில் தமிழகமே பரபரப்பாகி இருந்தது.
தலைவர் கலைஞர் தலைமையில் தி .மு .க ஓர் அணியாகவும் ,
அ.தி.மு.க.  - ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியாகவும் ,
ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் ,
மூப்பனார்  தலைமையில்  காங்கிரஸ் ஓர் அணியாகவும் , போட்டி இட்டன.
ஜானகி அணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்பொழுதுதான்
தொடங்கி இருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்து 
போட்டி இட்டது.
தி. மு. க. தலைவர் கலைஞர் அவர்கள் நடிகர் திலகத்தின்
புதிய கட்சியை பெயரிலேயே இரண்டு முன்னேற்றமா என்று 
தனக்கே உரிய பாணியில் கட்சியின் தொடக்க விழாவில்
பாராட்டி இருந்தார்.
நடிகர் திலகம்தான் தமிழில் நாட்டிலேயே அதிக ஓட்டு
வித்யாசத்தில் திருவையாறு தொகுதியில் வெற்றி பெறுவார்
என்று ஜூனியர்  விகடன் போன்ற  அரசியல் பத்திரிகைகள்
செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன.
தேர்தலும் வந்தது.
முடிவுகள் வெளியாக தொடங்கின.
வானொலியில் செய்திகளை என் ஒட்டு மொத்த குடும்பத்தாரும்
கேட்டு கொண்டிருதனர்
 பெருவாரியான இடங்களில் தி. மு. க. முன்னிலையில் இருப்பதாக
செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
நடிகர் திலகம் தன் தொகுதியில் பின் தங்குகிறார் 
என்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை சொல்லி விட்டு ,
ஆண்டவன் கட்டளை படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது 
கேட்கலாம் என்றார் செய்தி வாசிப்பாளர்.
அமைதியான நதியினிலே ஓடம்
என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது
கேட்டு கொண்டிருந்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி
இது தற்செயலா  ?  அல்லது  திட்டமிட செயலா?
எங்களுக்கு புரியவில்லை
இந்த பாடல் முடிந்ததும் அடுத்த அதிர்ச்சி
ஜானகி எம்.ஜி.ஆர் -ம் தோல்வி அடைந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சி
இதுக்கும் எதாவது பாட்டு போட்டுட போறாங்க ! என்று
என் அண்ணன் சொல்லி வாய் மூடவில்லை
பொன் எழில் பூத்தது புது வானில் (தி .மு .க வின் உதய சூரியன் 
சின்னத்தின் வெற்றி முகம்) 
வெண்பனி சூடும் நிலவே நில்
என் வன தோட்டத்து வண்ண பறவை 
(எம்.ஜி.ஆர் வீடு  ராமாவரம் தோட்டம் 
மேலும் அ.தி.மு.க ஜானகி அணியின் 
சின்னம் இரட்டை புறா)
சென்றது எங்கே சொல் சொல்
என்ற பாடல் ஒலிபரப்பாக தொடங்கியது
நடிகர் திலகத்திற்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல்
பொருந்தி போன அதே வேளையில்
ஜானகி எம் .ஜி.ஆருக்கு கண்ணதாசனின் அண்ணன் மகன்
பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் பொருந்தி போனது.
நடிகர் திலகம் உலக பெரும் நடிகர்.
அவரை தமிழ் மக்கள் தலை சிறந்த நடிகர் என்று 
கொண்டாடினார்களே தவிர அரசியல் தலைவர் 
என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை
என்றெல்லாம் -
அரசியலை ஆய்வு செய்வோர் கூறினாலும் 
என் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு 
பெரும் வேதனையே .
ஒரு தகுதியும் இல்லாத எத்தனையோ பேர் தேர்தலில்
வெற்றி பெரும் வேளையில் கலை தாயின் தவ புதல்வன் 
கலை வானின் முழு நிலவு எங்கள் நடிகர் திலகத்திற்கு 
திருவையாறு தொகுதியில் இரண்டாம் இடம் கூட
இல்லாமல் நான்காம் இடத்திற்கு தள்ளிய கொடுமையை
என்னென்று உரைப்பது?
இவை எல்லாம் ஒரு புறம் இருக்க 
நடிகர் திலகம் தன் அரசியல் தோல்வி பற்றி கூறும்போது ,
அரசியலில் நான் தோற்கவில்லை 
(அதாவது மக்கள் காரணமில்லை)
வஞ்சிக்க பட்டேன்
(எதிரிகளின் சூழ்ச்சி ) என்றார். 
காலங்கள் பறந்தோடிவிட்டன
இப்பொழுதும் இந்த இரண்டு பாடல்களையும்
கேட்க நேரும்போதெல்லாம் 
மனக்குகையில் உறங்கும் என்  நினைவுகள் மெல்ல கண் விழிக்கும்.

Sunday, October 25, 2015

ஆண்வழிச்சேறல்


1ஆண்கள் எல்லோரும் ஆணவக்காரரே ஆதிக்கம் செய்தால்
அவர்களை அறவே ஒதுக்கு 
2இல்லாளை மிதிக்கும் ஆண்மகனால் அக்குடும்பம் 
இல்லாது ஒழிந்து விடும்
3பெண் இனத்தை பேய் என்று இழிக்கும் ஆண்கள் கூட்டம்
நாய்களுக்கும் இழிவாய்த்தள்ளப்படும் 
4பெண்ணுக்கு பெண்ணை எதிரிகளாக்கும் 
ஆணாதிக்க உலகம் உதிரிகளாகிவிடும்
5பேராண்மை எனப்படுவது யாதெனின் 
பெண்மையை மதிப்பதே ஆகும்
6ஆண் ஏவல் செய்தொழுகும் பெண்மையின் அவன் உறவை 
அறுத்தெறிந்த பெண்ணே பெருமை உடைத்து
7நத்தையாய் ஆணாதிக்க கூட்டுக்குள் முடங்காதே 
பறவையாகு சிறகை விரி 
8மணப்பந்தல் முன்னிறுத்தி வரதட்சனை கேட்கும் 
கயவனுக்கு மாலை இடாதே விலங்கிடு
9ஒடிந்தும் பின் மடிந்தும் போவார் மண்ணுலகில் 
மனையாள் சொல் கேளாதோர்
10அகிலத்தையே வென்றிடுவாள் ஆண் சுகத்திற்காய் 
அடி பணிந்து மயங்காதாள்

புதிய பார்வை

நீதி தேவதையின் கண்களை 
கருப்பு துணியால் 
ஏன் மறைகிறீர்கள் ?
உண்மையை சொல்லுங்கள் !
கையில் இருக்கும் 
தராசு தட்டு ஒரு பக்கமாய்
சாய்வதை
கண்டுவிடக்கூடாது 
என்பதால் தானே?

Saturday, October 24, 2015

ஆறுதல்

நிலவு வரவில்லையே
என்று
நீ ஏன் தேய் பிறையாகிறாய்?
உனக்காகத்தான் கண்சிமிட்டுகின்றன
நட்சத்திரங்கள் 
ஏராளமாய்!

கடிகார வாழ்க்கை

வாழ்கையை விரட்டியபடி மனிதர்கள்
மனிதர்களை விரட்டியபடி மரணம்
 நொடி முள்ளை விரட்டியபடி  நிமிட முள் …
நிமிடமுள்ளை  விரட்டியபடி  மணிமுள்  …

ஒரு தலைவனின் தோல்வி

இங்கே சில
வெற்றிகளுக்கே கூட விலாசம் 
கிடையாது
 
ஆனால் உன்னுடைய 
ஒவ்வொரு தோல்விகளுக்கும்
சரித்திரமே உண்டு

Tuesday, February 10, 2015

இமயத்திற்கு பொன்னாடை

 சில வருடங்களுக்கு முன்பு  கவிஞர் மு.மேத்தாவை சந்தித்து
அவருடைய திரைபடபாடல்களை
நான் திறனாய்வு செய்து இருப்பது குறித்து பேசிகொண்டிருந்தேன்.
நான் எழுதி இருந்த கட்டுரைகளை படித்து பார்த்த கவிஞர்
என் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்து விட்டு  
கட்டுரைகள் குறித்து சில விளக்கங்களை என்னிடம்
கேட்டார்.
ஓங்கும் உந்தன் கைகளால் வானை புரட்டி போடு
புது வாழ்வின் கீதம் பாடு
என்றுதானே எழுதிருந்தேன்
தூங்கும்உந்தன் கைகளால் வானை புரட்டி போடு
புது வாழ்வின் கீதம் பாடு
 என்று வரிகளை குறிப்பிட்டு இருக்கிறீர்களே
என்று கேட்டார்
பாட்டு புத்தகத்தில் அவ்வாறு இருப்பதை நான்
சொன்னேன்.
கவிஞரின் திரைப்பட பாடல்கள் தொகுப்பு நூல்
ஓன்று 1996 நர்மதா பதிப்பக நூலாக
வந்துள்ளது.
ஆனால் நான் குறிப்பிட்ட சூரிய வம்சம் படத்தில் 
இடம்பிடித்த நட்சத்திர ஜன்னலில் என தொடங்கும்
பாடல் 1996 க்கு பிறகு என்பதால் அதில் இல்லை.
எனவே நடைபாதைகளில் விற்கும் அந்தந்த
திரைப்படங்களின் சிறு அச்சு நூலை நான்
வாங்கி இருந்தேன்
அதில்தான் கவிஞர் குறிப்பிட்ட இந்த பிழை
கவிஞரை சந்தித்து வந்த பின்பு சில நாட்களில்  வேறு 
ஒரு அச்சு பிழையை கண்டுபிடித்தேன்.
பொன்னாடை இமயத்திற்கு போர்த்திவிடலாம்
என்றுதான் கவிஞர் எழுதி இருந்தார்.
ஆனால் அந்த சிறு அச்சு நூலில் 
பொன்னாடம் இமயத்திற்கு போர்த்திவிடலாம்
என்று வரிகளை பிழையாக குறிபிட்டு  இருந்தார்கள்
திருக்குறளுக்கு நான்  உரை எழுதுவது என்பது
இமயத்திற்கு பொன்னாடை போர்த்திவிடுவதை போன்றது
என்று தலைவர் கலைஞர் சொன்னதாக
கவிஞர் ஒரு நேர்காணலில் 
குறிப்பிட்டு இருந்தார்
அந்த பாதிப்பிலேயே அந்த உவமையை  கையாண்டதாகவும்
சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்குறீர்கள் என்று
கலைஞரே பாராட்டியதாகவும் கவிஞர் மேத்தா அந்த
நேர்காணலில் சொல்லிருந்தார்.
அந்த நேர்காணலை படித்த போதே இதையும் 
கண்டுகொண்டேன்
திரைப்படங்களில் கருத்துள்ள பாடல்கள் அமைவதே அரிது.
அப்படி அமைந்த நல்ல பாடலையும் அச்சு பிழை 
செய்தே இப்படி கொலை செய்கிறார்களே என்று
வருந்தினேன்

Saturday, January 31, 2015

விடை தேடும் உவமேயம்

ஒவ்வொரு பத்து வருடத்தையும்
வாழ்க்கை கடக்கும் தருணங்களை 
மலை பயணத்தின் 
கொண்டை ஊசி வளைவுகளின் 
திருப்பங்களாக 
உணரும் வேளையில் . . .
இருளில் இருந்து
தீடீரென்று வெளிப்படும் 
வழிபறிகாரனைப  போல்
எழும் ஒரு  கேள்வி :
வாழ்க்கை  என்பது
மலை மீது ஏறுவதா 
 மலையில் இருந்து இறங்குவதா

Wednesday, January 28, 2015

பாடல்

கண்ணதாசன் மிக சிறந்த கவிஞர் . அதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை. அதே வேளையில் ஏனைய பிற கவிஞர்கள்
கண்ணதாசன்  அளவிற்கு  பாராட்ட படுவதில்லை.
ஆனால் இதில் வியப்பு என்னவென்றால்,



மருதகாசி அவர்கள் எழுதிய ,
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் 
ஏன் கையை  ஏந்த வெளிநாட்டில் 
 ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உ ன் மதிப்பு அயல் நாட்டில்

என்ற வரிகளோ,


புலவர் புலமைபித்தன் எழுதிய
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் 
பிறக்கையிலே 
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் 
அன்னை வளர்பதிலே


என்ற வரிகளோ,



மக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் எழுதிய,
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே
இருக்குது 
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் 
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது
என்ற வரிகளோ,



புகழடைந்த அளவிற்கு , எல்லா அரசியல் மற்றும் கலை 
இலக்கிய மேடைகளிலும் முழங்க பட்ட அளவிற்கு 
கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந் து
கூற முடியுமா என்பது கேள்வி குறியே  

Tuesday, January 27, 2015

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2

ஒரு வருத்தம்


அகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை
படத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும்
ஓர் உரையாடல்
பிரசாந்தை பார்த்து இஷா கோபிகர்
சொல்கிறார்
அன்பே! அன்பே ! அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட 
நம்பிடலாம்.
ஆனா அம்மா ! அம்மா! அப்பிடீன்னு சொல்லறானே அவன்களை
நம்பவே கூடாது. 
என்னைமிகவும் காயபடுத்திய வசனம்.
 அம்மா என்ற உறவுநிலையில் 
ஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற 
மனிதன் எனக்குள்ளும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.
என்னை விட்டுத்தள்ளுங்கள்.
தன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே 
தரிசித்த அபிராம பட்டரையோ,
எல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான்
என்றால் மனைவியும் தெய்வம்தானே 
என்று சிந்தித்த மகா கவி பாரதியையோ 
அந்த வசனத்தை கொண்டு எங்கனம் 
அளப்பது?
அந்த வகையில் அகத்தியன் அவர்களிடம்
என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

இயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு - ஒரு பாராட்டு ,

ஒரு பாராட்டு


சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தி
என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.
அந்த செய்தி ....
ஒரு இளம்பெண் காரில் தனியே பயணம் செய்து கொண்டு 
இருக்கும் போது அவரை தொடர்ந்து வந்த வாகனம்
மிகவும் வேகமாக வந்த தோடு மட்டும் இல்லாமல்
மோதியும் விடுகிறது.
அந்த வாகனத்தில் வந்த மனிதர் தன் தவறை
உணராமல் 
அந்த இளம் பெண்ணை மிகவும் இழிவாக பேசிவிட்டு
ஆணாதிக்க மமதையுடன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டு 
செல்கிறார்.
அந்த இளம் பெண்ணுக்கோ சுயமரியாதை காய முற்றதன்
விளைவாக கடும் கோபம் வருகிறது.
அந்த வாகனத்தை துரத்தி கொண்டே செல்கிறார்.
பின்னால் துரத்தி வரும் பெண்ணை பார்த்து 
அந்த மனிதர் பயந்து விடுகிறார்.
அந்த மனிதர் சென்ற வண்டி இப்பொழுது
ஒரு காவல் நிலையத்தின் வாசலில் போய்
நிற்கிறது.
வேகமாக வண்டியில் இருந்து குதித்தவர் 
காவல் நிலையத்திற்குள் சென்று விடுகிறார்.
இப்பொழுதும் அசராத  அந்த பெண் தானும் காவல்
நிலையத்திற்குள் சென்று அந்த மனிதரை தேடுகிறார்
அங்கு சென்ற பின்பே அவர் காவல் துறையில்
ஒரு உயர் பதவி வகிப்பவர் என்பது தெரிகிறது.
அவரின் உயர் பதவிக்கும் அஞ்சாத அந்த பெண்,
பெண்கள் குறித்து நீங்கள் சொன்ன இழிவான
சொற்களுக்கு மன்னிப்பு  கேட்டே ஆக வேண்டும்
என்று போராடுகிறார்.
இதுவரையில் 
ஆணாதிக்க சூழலிலேயே வாழ்ந்து வந்த அந்த 
மனிதனால் ஒரு பெண்ணிடம் எப்படி மன்னிப்பு 
கேட்பது என்ற வறட்டு கெளரவம் தடுத்தது.
கடைசியில் தன் போராட்டத்தில் வென்ற பின்பே 
அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகை வாயிலாக நான்
அறிந்தவை.
அந்த பெண் வேறு யாருமில்லை.
திரு.அகத்தியன் அவர்களின் மகள்தான்.
தன்னுடைய மகளை இவ்வளவு துணிச்சலாக
வளர்த்த திரு.அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.