Translate

Monday, August 19, 2013

kavingar vaali

இறைவா! உ‌ன் துதிபாட நேரில் வந்துவிட்டான் வாலி! - பா.விஜய்யின் கவிதாஞ்சலி தமிழ் சினிமாவின் வாலிபக் கவிஞராக வலம் வந்தவர் கவிஞர் வாலி. 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி அனைவரையும் பிரமிக்க வைத்தவர். உன் கவிதையை பூவுலகில் உள்ளவர்கள் கேட்டது போதுமென்று விண்ணுலகில் உள்ளவர்கள் கேட்க கடந்த ஜூலை 18ம் தேதி இறைவன் உனை அழைத்துச் சென்றானோ? இறைவனால் வாலியின் ஆத்மாவைத்தான் அழைத்துச்செல்ல முடிந்ததே தவிர அவரது கவிதைகளை அல்ல அது என்றும் எங்களுக்கே சொந்தம் வாலியின் ஆன்மா காற்றோடு கலந்தாலும் அவரது கவிதை காற்றில் வரும் கீதமாய் என்றும் வலம் வந்துகொண்டிருக்கும். வாலிபக்கவிஞருக்கு கவிஞர் பா.விஜய் தனது கவிதாஞ்சலியை கவிதையாய் தொகுத்துள்ளார். அவரின் கவிதையின் முத்தான வரிகள் இதோ... எஞ்ஞான்றும் கண்டதில்லை உன்போல் எவர் குளிர்விப்பார் செந்தமிழால் எம் செவியை? ஜூலை 18 ‘அடக்கம்’ இன்றுதான் அடக்கம் ஆனது! ‘இயக்கம்’ இன்றுதான் இயக்கம் நின்றது! சிகரம் போலுயர்ந்தும் - நாங்கள் கைத்தொடும் தூரமிறங்கிய அடிவாரமே அவதார காவியத்தின் அவதாரமே நுண்மான் நுழைப்புலம் நுகர்த்த சீர்நீ! தமிழ்ப்பால் தடையறச் சுரந்த மார்நீ! அவணி நெடுக-எழுத்தால் அடைமழை பெய்வித்த கார்நீ! ஒருவரல்ல அய்யன்மீர்-நீர் ஒருவன் எனும் ஒருமைக்குள் ஆயிரம் புலவராய் வாழ்ந்த ஊர்நீ! அமிர்தம் மட்டுமல்ல வெய்யிலில் கருத்த உழைப்பாளியின் நாவறட்சிக்கு ஈந்த நற்றமிழ் மோர்நீ! அனிச்சம் போல் மடல்விடும் அடுத்த தலைமுறை கவிஞர்களின் வேர்நீ! யார் தெரியுமா கவிஞர்களின் தலைவாநீ! புடவை கட்டியது போதுமென்று வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி! ‘‘நேற்றிரவு சுவாசம்-மிக மோசம்’’ இது நீ மரணப் படுக்கையில் யாத்த கடைசி சாசனம்! அது எப்படி அய்யா ஆவி தீரும் அந்தகாரத்திலும் எதுகையும் மோனையும் உன்னுள் ஆகிக்கொண்டிருந்தது பாசனம்? காலப்‌ பேழைக்குள் கடு மருந்து பூச்சு பூசி உன் பூதவுடலையும் வைத்திருக்கலாம் அழுகாது! வைத்திருந்தால்-உன் விழி முடங்கி கிடந்திருக்கும் விரல் மடங்கி கிடந்திருக்குமா எழுதாது? ஆன்மிகம் உன் அரண்! ஹரனைச் சேவித்த வரனே உன்னுள் எத்துனை அழகிய முரண்? அழகிய முரண்? வைஷ்ணவத் திலகம் - உன் சிந்தைச் சிகையைச் சுற்றி சிலிர்ப்பிப் பார்த்தால் - அதில் பெரியாரின் கலகம் எம்.ஜி.ஆரின் பாட்டுப் படைக்கு நீதான் நிரந்தர தளபதி! கலைஞரின் கவியரங்கில் நீ கணபதி! ஆச்சார அனுஷ்டானம் நோக்காது நோன்பு நீ நோற்றதில்லை - ஆனாலும அயிரை மீன் குழம்பிடம் - உன் அடிநாவு என்றுமே தோற்றதில்லை யாதென சொல்லுவேன்-உனை தமிழ் நாதெனச் ‌சொல்லுவேன் யாப்புக்குள் மூழ்கி குற்றியலிகரம் கொத்தி கட்டளை கலித்துறையும் மிளிற்றும் உன்பேனா ஐ ஷாப்புக்குள்ளும் மூழ்கி டிவிட்டரில் ‌சொல்பொறுக்கி திரைக்கும் பாட்டியற்றும் ஐ-டியூனா காவிரி-உந்தூள் மலர்சூழ களிநடை புரிந்தர திருவரங்கம்-உன் கருவரங்கம் ஆழிமேல் அனந்தசயனமிடும அரங்கராஜன் குடைநிழலில் அரங்கநாதனாய் நடந்தாய்!-இன்று கோடம்பாக்க கோபுரத்தில் குலவிளக்காய்க் கலந்தாய்! மனசொப்பக் கண்டால்-நீ நியூரான்ஸ் எல்லாம் நித்தம் இ‌ளமைச் சொரிய புதுப்புது சொல் கண்டெடுக்கும் நியூட்டன் வயசொப்பக் கண்டால் வாலிபக் கவியே-நீ பாட்டுப் பேரன்களுக்கெல்லாம் பாட்டன் அகவையில் தான்நீ எண்பத்திரெண்டு!-ஆனால் கொஞ்சிச் சிரித்துப் பேசும் எண்ணத்தில் ‘ரெண்டு’ நீரே முற்பிறவியில் ஏழிசை தாண்டி தாழிசை கண்ட திருநாவுக்கரசர்! இப்பிறவியில் சொன்ன சொல் பொய்க்காது கொடுத்த வாக்குத் தவறாது-வாழ்ந்த ஒருநாவுக்கு அரசர்! கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும் உண்ணும் தீ என தெரிந்தும் விட்டுவந்தோம்! தமிழே-இதுவரை நீ வாசித்த கவிதையை தீ வாசிக்கட்டும் என்று-இன்று! பிரபஞ்சமே பிரமிக்கிறது பேராசானே! பதினைந்தாயிரம் பாடல் எனும் கணக்கைக் கேட்டு! ஓ! இறைவா-எமது தமிழ்பெருங் கவிஞன்-உனை நேரில் பாட வந்துவிட்டான் அந்த அமரஜோதி அமர-உன் அகத்தின் அருகாமையில் ஓர் இடத்தைக் காட்டு! -பா.விஜய்